சமயோசிதமாக செயல்பட்ட ரெயில்வே ஊழியர்களை அதிகாரிகள் பாராட்டினர்.
கதவு பூட்டப்பட்டிருந்ததால் ரெயில் படியில் 14 கி.மீ. தூரம் தொங்கியபடி சென்ற பயணி
- பராமரிப்பு பெட்டி என்பதால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
- சரவண அருணாச்சலம் பத்திரமாக இறக்கி விடப்பட்டு, எஸ்-2 பெட்டியில் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.
மதுரை:
நெல்லையில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கண் ரெயில்வே வழியாக மும்பை தாதர் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கடந்த 2-ந் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டது. அப்போது சரவண அருணாச்சலம் என்பவர் ஓடும் ரெயிலில் கடைசி பெட்டியில் ஏற முயன்றார்.
அது பராமரிப்பு பெட்டி என்பதால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே சரவண அருணாச்சலம் வாசல் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க நேரிட்டது. இதனை ரெயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்களான ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் தற்செயலாக பார்த்தனர். இந்த ரெயிலின் அடுத்த நிறுத்தம் கோவில்பட்டி என்பதால், 65 கிமீ தொலைவுக்கு படியில் தொங்கியபடி பயணிப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அவர்கள், அது தொடர்பாக நிலைய அதிகாரிக்கும், அதே ரெயிலின் மேற்பார்வையாளர் பாலமுருகனுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் ரெயில் 14 கிலோ மீட்டர் தொலைவை கடந்து கங்கைகொண்டான் வந்து விட்டது. அங்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சரவண அருணாச்சலம் பத்திரமாக இறக்கி விடப்பட்டு, எஸ்-2 பெட்டியில் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.
நெல்லை தாதர் விரைவு ரெயிலில் சமயோசிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரெயில் பெட்டி பராமரிப்பு ஊழியர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.
அப்போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை எந்திரவியல் பொறியாளர் மகேஷ்கட்கரி, கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.