தமிழ்நாடு

நில எடுப்பு அலுவலகத்தை டிராக்டருடன் முற்றுகையிட்ட கிராம மக்கள் கைது

Published On 2024-02-26 08:32 GMT   |   Update On 2024-02-26 08:32 GMT
  • முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
  • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நில எடுப்பு அலுவலகத்தை டிராக்டரில் சென்று முற்றுகையிட கிராமமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை ஏகனாபுரம் மற்றும் பொடவூர் கிராம மக்கள் ஏராளமானோர் ஏகனா புரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து டிராக்டரில் சென்று நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News