கருமுட்டை எடுக்க மேலும் பல பெண்களை அழைத்து சென்றாரா?- பெண் புரோக்கரிடம் போலீசார் விசாரணை
- பெண் புரோக்கர் மாலதியிடம் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
- பண ஆசை காட்டி மேலும் பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் தொடர்பாக அவரது தாய் வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, சிறுமியின் பிறப்பு, ஆதார் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. இவர்கள் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆர்.என்.புதூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பான ஆவணங்களையும் கேட்டு பெற்றனர். அதோடு இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை தானம் கொடுத்தவர்கள் பட்டியலையும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கருமுட்டை எடுக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பெருந்துறையில் உள்ள ஆஸ்பத்திரி மூலம் திருவனந்தபுரத்துக்கும், ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரி மூலம் திருப்பதிக்கும் சிறுமியை அழைத்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவ குழுவினர் 2 ஆஸ்பத்திரிக்கும் ஆவணங்களுடன் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.
அதன்படி நேற்று திருப்பதி, திருவனந்தபுரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி மேலாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் சென்னை மருத்துவக்குழு முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
மேலும் ஆவணங்களையும் கேட்டு பெற்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 8 மணி வரை நடைபெற்றது. பின்னர் மருத்துவ குழுவினர் தேவைப்படும்போது விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
மருத்துவக்குழு ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசாரும் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்று 2-வது முறையாக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே 15 நாள் போலீஸ் காவல் முடிந்து சிறுமியின் தாய் உள்பட 4 பேரும் ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சூரம்பட்டி போலீசார் பெண் புரோக்கர் மாலதியை 5 நாள் காவலில் எடுக்க கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் 1 நாள் மட்டுமே விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, சான்றிதழ் போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 3 பேரை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். பெண் புரோக்கர் மாலதியை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பெண் புரோக்கர் மாலதியிடம் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மாலதியின் 2 வங்கி கணக்குகளின் பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தினர்.
பொதுவாகவே ஒருவர் கருமுட்டை கொடுத்தால் மீண்டும் 6 மாதம் கழித்துதான் கருமுட்டை கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் மாலதியின் வங்கி கணக்கில் 6 மாத இடைவெளியில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர் பண ஆசை காட்டி மேலும் பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.
விசாரணை முடிந்ததும் மாலதி மீண்டும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.