தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2023-05-28 09:40 GMT   |   Update On 2023-05-28 09:41 GMT
  • கல்லால் குழுமத்தின் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது.
  • ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ..8.5 கோடி பெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

சென்னை:

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

இந்நிலையில் கல்லால் குழுமத்தின் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கல்லால் குழுமம் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அறக்கட்டளையில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ..8.5 கோடி பெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அந்த தொகையை உடனடியாக வங்கி கணக்கில் இருந்து அவர் எடுத்துக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரவீந்திரநாத் எம்.பி.க்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், தயாரிப்பாளருமான ஜி.கே.எம்.குமரனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள இல்லத்தையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் ரூ.36 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News