தமிழ்நாடு

மழை குறைந்ததால் விடைபெறும் தருவாயில் வடகிழக்கு பருவமழை காலம்

Published On 2024-01-11 03:15 GMT   |   Update On 2024-01-11 03:15 GMT
  • நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.
  • பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தற்போது பெய்து வருகிறது.

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த கால கட்டங்களில் 44 செ.மீ. மழை பதிவாகும். இது இயல்பான மழை அளவாக சொல்லப்படுகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மாதத்தில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது.

அதன் பின்னர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. அதிலும் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி வட கடலோர மாவட்டங்களிலும், 16, 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

இந்த மழையால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பைவிட 2 செ.மீ. மழை அதிகமாக பதிவானது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தற்போது பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், அதன் பின்னர் வறண்ட வானிலையே தமிழகத்தில் நிலவும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி பார்க்கையில் வடகிழக்கு பருவமழை காலம் விடைபெறும் தருவாய்க்கு வந்துவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News