தமிழ்நாடு

ராமேசுவரம் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று "திடீர்: சோதனை

Published On 2023-08-31 06:16 GMT   |   Update On 2023-08-31 06:16 GMT
  • சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார்.
  • சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

ராமேசுவரம்:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அதனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமான செயல்பாடுகள், இறையாண்மைக்கு குந்தகம் விடுக்கும் வகையிலான பயிற்சிகள் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அந்த வகையில் ராமேசுவரத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள மீனவ கிராமமான தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சையது யூசுப் (வயது 30). இவரது தந்தை அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இதற்கிடையே சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு 6 மாதங்கள் வரை தங்கியிருந்த அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.

துபாய் நாட்டில் சையது யூசுப் தங்கியிருந்த நாட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சொந்த ஊர் திரும்பிய சையது யூசுப்பை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவரது செயல்பாடுகள், யார், யாருடன் பேசி வருகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 5.40 மணிக்கு தங்கச்சிமடம் கிராமத்துக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற 7 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சையது யூசுப் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த அவர் மற்றும் குடும்பத்தினர் யாரையும் வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

4 மணி நேர சோதனைக்கு பிறகு அங்கிருந்த புறப்பட்ட அதிகாரிகள் எந்தவித ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை. ஆனால் சையது யூசுப்பிடம், அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

மீனவ கிராமத்தில் அதிரடியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியது அப்பகுதியினரை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

Tags:    

Similar News