நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு இன்று தொடங்கியது
- வந்தே பாரத் ரெயிலுக்கு சாதாரண ஏ.சி. பெட்டியில் ரூ.1,620 கட்டணமாகவும், எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டியில் ரூ.3,025 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
- நெல்லையில் இருந்து சென்னை செல்லும்போது பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு என 2 வேளை உணவு வழங்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணி அளவில் தனது இயக்கத்தை தொடங்குகிறது.
தொடக்க விழாவையொட்டி இந்த ரெயிலில் நாளை பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. தொடர்ந்து மதியம் 1.28 மணிக்கு கோவில்பட்டி, மதியம் 2.18 மணிக்கு விருதுநகர், 2.55 மணிக்கு மதுரை, மாலை 4.13 மணிக்கு திண்டுக்கல் தொடர்ந்து திருச்சிக்கு சென்றடைகிறது. பின்னர் விழுப்புரம், தாம்பரம் வழியாக எழும்பூரை சென்றடைகிறது. தொடக்க விழாவையொட்டி ரெயிலை வரவேற்பதற்காக கூடுதல் நிறுத்தங்களில் ரெயில் நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. சென்னையில் இருந்து நெல்லை வருவதற்கு 25-ந்தேதி முதலும், நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கு 27-ந் தேதி முதலும் பயணம் செய்வதற்கு முன்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் இந்த ரெயிலுக்கு சாதாரண ஏ.சி. பெட்டியில் ரூ.1,620 கட்டணமாகவும், எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டியில் ரூ.3,025 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இவற்றில் சாதாரண ஏ.சி. பெட்டியில் சாப்பாடு இல்லாமல் ரூ.1,320 மற்றும் எக்சிகியூட்டிவ் ஏ.சி. பேட்டியில் சாப்பாடு இல்லாமல் ரூ.2,375 வசூலிக்கப்படுகிறது.
இதில் உணவு என்பது பயணிகளின் விருப்பம். அவர்கள் டிக்கெட் புக் செய்யும்போதே உணவு வேண்டுமா? வேண்டாமா? என்று பதிவு செய்து அதற்கேற்ப டிக்கெட்டை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னை செல்லும்போது பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு என 2 வேளை உணவு வழங்கப்படுகிறது. ஒரு நேரம் டீ வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லை வரும்போது டீ அல்லது சூப் மற்றும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை முதல் முன்பதிவு தொடங்கியதையொட்டி, தீபாவளி முன்பதிவும் மும்முரமாக நடைபெற்றது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதிக்கு முன்பதிவு திறக்கப்பட்ட சில நிமிடங்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 45 என்றானது.