தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் இன்று மாலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

Published On 2023-01-29 10:48 IST   |   Update On 2023-01-29 10:48:00 IST
  • தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர்.
  • அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இதேப்போல் தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். பா.ம.க, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட போவதில்லை என்று அறிவித்து விட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை. அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிட்ட பெண் வேட்பாளர் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அதாவது அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது 7.65 சதவீதமாகும்.

இதனால் தற்போது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஈரோடு மரப்பாலத்தில் இன்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். கடந்த முறை போன்று பெண் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News