தமிழ்நாடு செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மாயமான முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Published On 2023-08-19 08:45 IST   |   Update On 2023-08-19 08:45:00 IST
  • கடந்த 2000-ம் ஆண்டு தொன்மையான முருகன் கற்சிலை திருட்டு போனது.
  • மத்திய அரசு உதவியுடன் மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் என்ற பழமைவாய்ந்த சிவன் கோவில் இருந்தது. வெளிநாட்டினர் படையெடுப்பால் இந்த கோவில் சிதைந்தது. பின்னர் அந்த கோவிலில் இருந்த சாமி சிலைகளை சேகரித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இதில் கடந்த 2000-ம் ஆண்டு தொன்மையான முருகன் கற்சிலை திருட்டு போனது. அப்போது இதுபற்றி போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொன்மையான பல சிலைகளை மீட்டு வரும் தகவலறிந்து முருகன் சிலை காணாமல் போனது குறித்து தச்சூர் மக்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தச்சூர் சிவன் கோவிலில் இருந்து திருடுபோன, நின்ற நிலையில் உள்ள முருகன் கற்சிலை அமெரிக்க நாட்டின் உள்பாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை மத்திய அரசு உதவியுடன் மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News