தமிழ்நாடு செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியது- கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-12-04 09:53 IST   |   Update On 2022-12-04 09:53:00 IST
  • வைகை அணையின் நீர் மட்டம் 65.35 அடியாக உள்ளது.
  • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.57 அடியாக உள்ளது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அறிவுறுத்தியுள்ளது. ரூல் கர்வ் முறைப்படி மே மாதம் 31-ந் தேதி வரை 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 142 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது.

நேற்று மாலை 140 அடியை எட்டியதும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டி பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்துறை, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பினர். 141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 65.35 அடியாக உள்ளது. 1076 கன அடி நீர் வருகிறது. 1719 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.57 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 0.4, தேக்கடி 1.4, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1, போடி 7.2, வைகை அணை 2.2., சோத்துப்பாறை 6, பெரியகுளம் 3, வீரபாண்டி 3, அரண்மனைப்புதூர் 0.8, ஆண்டிபட்டி 4.2, சண்முகாநதி அணை 7.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News