தமிழ்நாடு

ஷாகுல் ஹமீது

சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. நிர்வாகி பலி

Update: 2023-06-10 09:15 GMT
  • வல்லம்-திருச்சி பிரிவு சாலை அருகே வரும் போது ஒருவர் சாலையை கடப்பதற்காக வந்துள்ளார்.
  • விபத்தில் ஷாகுல் ஹமீது-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வல்லம்:

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் வந்திருந்தார். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வல்லம் பேரூராட்சி 12-வது வார்டு தி.மு.க. முன்னாள் செயலாளரும், வல்லம் அரசு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான ஷாகுல் ஹமீது (வயது 55) மற்றும் வல்லம் நகர தி.மு.க. பொருளாளர் யூசுப் ஆகியோர் வல்லத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

வல்லம்-திருச்சி பிரிவு சாலை அருகே வரும் போது ஒருவர் சாலையை கடப்பதற்காக வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டர் சைக்கிள் சாலையை கடந்தவர் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த யூசுப், பின்னால் அமர்ந்திருந்த ஷாகுல் ஹமீது மற்றும் சாலையை கடந்த நபர் என 3 பேரும் கீழே விழுந்தனர். விபத்தில் ஷாகுல் ஹமீது-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற இருவரும் படுகாயங்களுடன் சாலையில் கிடந்தனர்.

உடனே, அவ்வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை தி.மு.க. நிர்வாகியான ஷாகுல் ஹமீது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News