அரசு விடுதி மாணவர்கள் உணவுத்தொகை ரூ.1,400 ஆக உயர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, எந்தவகையான வன்முறையையும் அரசு சகித்துக்கொள்ளாது, கடும் நடவடிக்கை எடுக்கும்.
- கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று 2-வது நாளாக மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை வருமாறு:-
மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இந்த திட்டத்தில் 1.63 கோடி மகளிருக்கு, எந்தவித சிரமுமின்றி, சீரிய முறையில் விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப்பெற்றதே மாபெரும் சாதனையாகும்.
மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தில் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்த வேண்டும். சில திட்டங்களில் அவ்வப்போது காணப்படும் சுணக்கத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அவற்றை எல்லாம் நீங்கள் மனதிலே நிலைநிறுத்தி அந்த காலத்திற்குள் அவற்றை முடிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, எந்தவகையான வன்முறையையும் அரசு சகித்துக்கொள்ளாது, கடும் நடவடிக்கை எடுக்கும். இவ்வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் அளிக்கும் புகார் மனு மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென ஒரு ஆய்வு நடைமுறையை உள்துறை செயலாளர் வழங்கி, அடுத்த மாதம் முதல் செயல்படுத்த வேண்டும்.
ஒரு சில மாவட்டங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் தவிர, மற்ற நாட்களில் மக்களை கலெக்டர்கள் சந்திக்கவில்லை. இது சரியல்ல. மக்களைச் சந்திப்பதற்கு பார்வையாளர்கள் நேரம் என ஒதுக்கி அவர்களைக் கட்டாயம் சந்திக்க வேண்டும். சாலை விபத்துகள், இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது நீங்களே களத்திற்குச் செல்ல வேண்டும். மக்களை மீட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு, அரசின் முகமாக, மக்களுக்கு உதவும் கரமாக நீங்கள் செயல்பட வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக அரசு பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும். தேர்தல் என்பதால் விமர்சனம் மிக அதிகமாக வரும். உங்கள் கவனத்திற்கு வரும் புகாரை உடனடியாக களையுங்கள்.
இந்த கூட்டத்தில் சில அறிவிப்புகளை தற்போது வெளியிட விரும்புகிறேன். அரசு பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 1,400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்து நூறு என்பது இனி 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 844 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.68.77 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
விசாரணை கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று 'வீடியோ கான்பரன்சிங்' முறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்பு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுக்குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.