கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகை
- தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
ஈரோடு:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.
இன்று மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியிலும், 5.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியிலும், 6 மணிக்கு மரப்பாலம், அண்ணா டெக்ஸ் மேடு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.
முன்னதாக ஈரோடு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.