தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 17 விருதுகள்: அமைச்சர் பெருமிதம்

Published On 2024-03-03 03:20 GMT   |   Update On 2024-03-03 03:20 GMT
  • மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.
  • முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது.

சென்னை:

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும், எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்து துறை சிறந்த முறையில் பணியாற்றியது. இதன் பயனாக அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022-23-ம் ஆண்டுக்கான தேசிய பொது பஸ் போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.

முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4-ல் ஒரு பங்கு ஆகும்.

பஸ்களில் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயற்திறன் (கிராமப்புறம், நகர்ப்புறம்), வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை 6 விருதுகளுக்கும், கும்பகோணம் 5 விருதுகளுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் 3 விருதுகளுக்கும், சேலம் 2 விருதுகளுக்கும் தேர்வாகி உள்ளன.

ஏ.எஸ்.ஆர்.டி.யு. தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒரு விருதும் பெற்றிட தேர்வாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News