தமிழ்நாடு

கை அகற்றப்பட்ட பெண்ணின் உயிரை காக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2023-09-28 05:31 GMT   |   Update On 2023-09-28 05:31 GMT
  • ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஜோதி என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் கை எடுக்கப்படவில்லை.
  • பெண்ணுக்கு அளித்த சிகிச்சை தவறு என்று சொன்னால் எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

சென்னை:

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வலது கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோதியை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஜோதி என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் கை எடுக்கப்படவில்லை. உயிரை காப்பற்ற வேண்டும் என்றால் கையை எடுக்க வேண்டுமென அவரிடம் கேட்டு அதற்கு அவர் ஒப்புதல் தெரிவித்த பின்னரே வலது கை அகற்றப்பட்டது. அந்த பெண் தன்னுடைய கணவரிடமே ஒப்புதல் தெரிவித்துதான் கையை எடுத்ததாக கூறினார். வெளியில் உள்ள டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை குறித்து கேட்டறியலாம்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்துவந்து கூட காட்டுங்கள். பெண்ணுக்கு அளித்த சிகிச்சை தவறு என்று சொன்னால் எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். இது அரியவகை நோய் என்று டெல்லியில் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெண்ணின் கணவரிடமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கையை எடுக்கவில்லையென்றால் பெண் உயிர் காப்பாற்றப்பட்டிருக்காது என அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் மருத்துவ சேவை பத்தவில்லை என்றால் வேறு எந்த மருத்துவமனைக்கு செல்ல ஆசைப்பாட்டாலும் அதற்கான மருத்துவ காப்பீட்டு செலவை நாங்களே ஏற்கிறோம் என சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டோம். பெண்ணின் கணவர் ஆதங்கத்தில் புகார் கூறியதாக தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியையும், அதன் சேவையையும் கொச்சைப்படுத்த நினைக்க வேண்டாம். அலட்சியம் நடந்தது தெரியவந்தால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து தான் வருகிறோம். அந்த பெண்ணின் உயிரை காக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இது ஒரு அரிய வகை நோய், ரத்த உறையும் தன்மையுடைய நோய் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு அதிகரித்தால் அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News