தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை- அமைச்சர் கீதாஜீவன்

Published On 2023-08-10 08:15 GMT   |   Update On 2023-08-10 09:12 GMT
  • தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது.
  • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

நெல்லை:

தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பயிற்சி கூட்டத்தில் சென்னை, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினார்.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்கும் திட்டம் 2012-ல் கொண்டுவரப்பட்டாலும் தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி 2021 மே மாதத்திற்கு பிறகு இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. இந்த திருமணங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆப்லைன் முறையில் பெறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News