தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன்

கவர்னர் - ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்: அமைச்சர் துரைமுருகன்

Published On 2022-08-11 07:42 GMT   |   Update On 2022-08-11 07:42 GMT
  • ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது.
  • தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல.

வேலூர்:

வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேலூரில் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதே கட்சியை சேர்ந்தவருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. பஜாரில் பீடி, சிகரெட் விற்பனை செய்து கொண்டு இருந்தவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய பணியை செய்யக்கூடிய தகுதி அந்த காண்ட்ராக்டருக்கு இல்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம்.

ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் கிருஷ்ணகிரி வரை ஆந்திரா பகுதி இருப்பதால் எளிதில் கடத்தி வந்து விடுகின்றனர்.

கவர்னர், நடிகர் ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்.

பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

மேல்அரசம்பட்டு அணை கட்டிட பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும். தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல. அவர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News