தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூருக்கு திடீர் பயணம்

Published On 2024-09-02 07:57 IST   |   Update On 2024-09-02 07:57:00 IST
  • அமைச்சர் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் திடீர் பயணம் அல்ல.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

சென்னை:

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து கொண்டு வருவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 19 நாள் பயணமாக சென்றுள்ள அவர், அவரும் 15-ந் தேதி சென்னை திரும்ப இருக்கிறார்.

இந்த நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் நேற்று காலை திடீரென சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

ஏற்கனவே, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு சூடாக பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய துரைமுருகன், அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமரசத்தால் அமைதியானார். இந்த நிலையில்தான், அவர் தற்போது திடீரென சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, "அமைச்சர் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் திடீர் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிட்டதுதான். மருத்துவ பரிசோதனைக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார்.

அங்குள்ள இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராமனிடம் ஆலோசனைக்கு இணங்க ஆண்டுக்கு ஒருமுறை அவரை சென்று சந்தித்து வருகிறார். மற்றபடி ஒன்றும் இல்லை. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டார்" என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன் வரும் 4-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

Tags:    

Similar News