தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்

Published On 2022-12-18 03:05 GMT   |   Update On 2022-12-18 03:05 GMT
  • போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது.
  • ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.

சென்னை:

சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது. சாலையில் நிலவும் காற்றின் தன்மை சற்று மோசமாகத்தான் இருக்கும். ஒருவர் 4 அல்லது 5 ஆண்டுகள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காற்றின் மாசுபாடு காரணமாக அவர் பாதிக்கப்படுவார். எனவே போக்குவரத்து போலீசாருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமான நடவடிக்கை ஆகும்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீசார்தான். எனவே போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் முக்கியம்.

முழு உடல் பரிசோதனை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த விவர குறிப்புகள், இதுபோன்ற முகாம்களுக்கு வரும்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம். இது போன்ற மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தி அனைத்து போக்குவரத்து போலீசாரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், நீரழிவு, காசநோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள், பல், கண் ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றன.

இதில் போக்குவரத்து போலீசார் 250 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சாமே சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News