தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்ய ஆகஸ்டு 3-ந்தேதி வரை அவகாசம்

Published On 2023-07-29 05:31 GMT   |   Update On 2023-07-29 05:31 GMT
  • நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
  • சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இதற்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 27-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பொது கலந்தாய்வில் பங்கேற்கின்ற மாணவ-மாணவிகள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி வரை மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்து லாக் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரேங்க் பட்டியலில் 1-ல் இருந்து 25,856 வரை உள்ள நீட் மார்க் 720-ல் இருந்து 107 வரை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு தாமதம் ஆகிறது. இன்று வரவேண்டிய முடிவு தள்ளிப்போவதால் அதில் இடம் கிடைக்காதவர்கள் தமிழக மாநில ஒதுக்கீட்டு இடங்களை பெற வரக்கூடும்.

அதனால் தமிழக மாணவர்களின் நலன் கருதி இடங்களை தேர்வு செய்வற்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

31-ந்தேதி மாலை வரை இடங்களை தேர்வு செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3-ந்தேதி மாலை 5 மணி வரை கூடுதலாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News