தமிழ்நாடு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்த காட்சி.

மதுரை மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,500 ஆக குறைந்தது

Published On 2022-12-04 10:17 IST   |   Update On 2022-12-04 10:17:00 IST
  • பனிப்பொழிவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் குறைவாகவே உள்ளது.
  • பூக்களின் விலை இன்று குறைந்து காணப்பட்டதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

மதுரை:

மல்லிகைப்பூவிற்கு பெண்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் மணம் நிறைந்த மதுரை மல்லிகைப்பூவிற்கு தனிமவுசு உண்டு. இதனால் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மல்லிகைப்பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக விலையும் மற்ற நாட்களை விட மிகவும் அதிகரித்து காணப்படும்.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை உள்ளிட்ட பூக்கள் டன் கணக்கில் விற்பனை வருகிறது. இங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்வார்கள்.

தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று காலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூவின் விலை நேற்றை காட்டிலும் கணிசமாக குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்கப்பட்டது.

பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் நேற்றை விட இன்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.1 ஆயிரத்து 800-ஆக விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500 ஆக குறைந்தது. ரூ.1,900-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது.

ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,500-க்கும், ஜாதிப்பூ ரூ.1,200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், பட்டன்ரோஸ் ரூ.250-க்கும், செவ்வந்தி, பன்னீர் ரோஸ் மற்றும் அரளிப்பூ ரூ.150-க்கும், ரோஜா ரூ.130-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும், வாடாமல்லி ரூ.60-க்கும் விற்பனையானது.

பூக்களின் விலை இன்று குறைந்து காணப்பட்டதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை மறுநாள் திருக்கார்த்திகை என்பதால் பூக்களின் விலை நாளை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News