தமிழ்நாடு

பெரியாறு அணையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கு: மதுரை ஐகோர்ட் அதிரடி

Published On 2023-08-16 09:10 GMT   |   Update On 2023-08-16 09:10 GMT
  • பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளா கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது.
  • இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும்.

மதுரை:

மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு கொள்ளளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்னர், முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து அப்போதில் இருந்து பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளா கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது. தமிழகப் பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப் பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட கூடுதலாக இந்த வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், 142 அடிக்கும் அதிகமாக உள்ள தண்ணீர் வீணாக கேரள பகுதியில் வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் லோயர் கேம்பில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.

எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்த பிறகு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என்று பல்வேறு உத்தரவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் தங்களது முறையீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News