தமிழ்நாடு

சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதி பேசிய வீடியோவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-10-06 10:17 GMT   |   Update On 2023-10-06 10:17 GMT
  • சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.
  • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.

இந்த மாநாட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றுள்ளார். தி.மு.க. எம்.பி. ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளனர்.

இதனால் இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் கேட்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி, தி.மு.க. எம்.பி. ராசா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் எதிரானது அல்ல. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களின் பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜோதி, அமைச்சர்களின் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு என்பது இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். 

Tags:    

Similar News