தமிழ்நாடு செய்திகள்

அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு

Published On 2024-02-02 08:39 IST   |   Update On 2024-02-02 08:39:00 IST
  • கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
  • எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் 24-ந்தேதி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்திவைத்தால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், 'கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் மனுதாரர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது. அதில் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் கிளாம்பாக்கத்துக்கு செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல ஆந்திரா, கர்நாடகம் செல்லும் ஆம்னி பஸ்களை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், 'பயணிகளை இறக்கி விட்டு காலியாக வரும் பஸ்களை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். ஆனால் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க அரசு தயாராக இருக்கிறது. ரூ.400 கோடி செலவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பெண்களுக்கான பிரத்யேக வசதிகள், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், எஸ்கலேட்டர்கள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தூரத்தைத் தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை.

கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண இன்று (வெள்ளிக்கிழமை) பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது' என்றார்.

இதையடுத்து நீதிபதி, 'இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார். பின்னர், ''எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்ட வேண்டும். எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க இயலாது'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Tags:    

Similar News