தமிழ்நாடு

எனது பேச்சை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கொன்றோம்: கைதான புதுப்பெண்ணின் தந்தை வாக்குமூலம்

Published On 2023-11-04 08:20 GMT   |   Update On 2023-11-04 08:20 GMT
  • கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்.
  • மேலும் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரும், தூத்துக்குடி திரு.வி.க. நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவும் (20) காதலித்தனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், தனது உறவினர்கள் மூலம் தம்பதியை கொலை செய்ய திட்டமிட்டார்.

2 நாட்கள் அங்கேயே இருந்த காதல் தம்பதி நேற்று முன்தினம் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு சென்றனர்.

இதையறிந்து முத்துராமலிங்கம் தூண்டுதலின்பேரில், அவருடைய உறவினர்களான தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல், மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துராமலிங்கம், இசக்கிராஜா, ராஜபாண்டி மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான முத்துராமலிங்கம் கூறியதாவது:-

என்னுடைய மகள் கார்த்திகாவும், மாரிச்செல்வமும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் எனது வீட்டுக்கு பெண் கேட்டு வந்தனர்.

அப்போது 6 மாதம் கழிக்கட்டும், பிறகு பார்த்து கொள்வோம் என்று கூறினேன். ஆனால் அதற்குள் மாரிச்செல்வம் எனது மகள் கார்த்திகாவை அழைத்து சென்று பதிவு திருமணம் செய்தார். இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. எனது அனுமதி இல்லாமலும், எனது பேச்சை மீறியும் திருமணம் செய்ததால், எனது உறவினர்கள் மூலம் அவர்களை கொலை செய்ய நினைத்தேன். அதன்படி மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த 2 பேரையும் வெட்டி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னரே கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவன் தவிர மற்றவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான்.

Tags:    

Similar News