தமிழ்நாடு

கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு: மேட்டுப்பாளையம் மலைரெயில் மேலும் 2 நாட்கள் ரத்து

Published On 2023-11-05 04:05 GMT   |   Update On 2023-11-05 05:42 GMT
  • மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.
  • ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

விடிய, விடிய பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் முழுவதும் மூடியபடி கிடந்தது.

கல்லாறு-அடர்லி பாதையிலும் மண்சரிவும், மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட தயாராக இருந்தது.

தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்து இன்றும், நாளையும் என 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News