தமிழ்நாடு

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நடைபெறுவதை காணலாம். 

குழித்துறை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு

Published On 2023-10-15 07:03 GMT   |   Update On 2023-10-15 07:03 GMT
  • மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.
  • தொடர் மழையின் காரணமாக வேறு சில இடங்களிலும் மண் சரிவு ஏற்படலாம் என்று தெரிகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக குழித்துறை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. இதேபோல் மதுரை-புனலூர் ரெயிலும் தாமதமாக இயக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்டது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ரெயில்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டன.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்களும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக வந்தது. தொடர் மழையின் காரணமாக வேறு சில இடங்களிலும் மண் சரிவு ஏற்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News