விசைப்படகின் ஆங்கர் கயிறு தாக்கி தொழிலாளி பலி
- ராமநாதபுரம் தொழிலாளி செய்யது நவாஸ் (36) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
- குளச்சல் மரைன் போலீசில் விசைப்படகு ஓட்டுனர் ஜஸ்டின் புகார் செய்தார்.
குளச்சல்:
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மேலத்துறை பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் ஜெகன். இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது படகில் குமரி மாவட்ட தொழிலாளர்கள் 8 பேர், ஒடிசாவை சேர்ந்த 5 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 20 தொழிலாளர்கள் வழக்கம்போல் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று கன்னியாகுமாரி கடற்பகுதியிலிருந்து 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒடிசா தொழிலாளி திபாகர மாலிக் (வயது 64) கடலில் போட்டிருந்த ஆங்கரை மேலே எடுக்க முயற்சித்தார். அப்போது ஆங்கர் கயிறு வேகமாக சுழன்றதில் கயிறு திபாகர மாலிக் தலை மற்றும் முகத்தில் அடித்தது. இதில் அவர் மயங்கி விசைப்படகுக்குள் விழுந்தார்.
அருகில் நின்ற ராமநாதபுரம் தொழிலாளி செய்யது நவாஸ் (36) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் விசைப்படகை சின்ன முட்டம் துறைமுகத்திற்கு செலுத்தி திபாகர மாலிக்கை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திபாகர மாலிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசில் விசைப்படகு ஓட்டுனர் ஜஸ்டின் புகார் செய்தார். அதன்பேரில் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார். பலியான திபாகர மாலிக்கிற்கு திருமணமாகி 2 மகன்களும்,1 மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.