தமிழ்நாடு

கவர்னர் தலைமையில் பட்டமளிப்பு விழா- சர்ச்சைக்கு மத்தியில் பங்கேற்றார் மத்திய மந்திரி எல்.முருகன்

Published On 2022-07-13 10:50 GMT   |   Update On 2022-07-13 10:50 GMT
  • விழாவில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி எல்.முருகன் கல்வி துறையை சார்ந்தவர் அல்ல.
  • உயர் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி இன்று நடந்தது.

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குனர் பலராம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் 1180 மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி மற்றும் கவுரவ பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கி பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று அவர் விழாவில் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி அளித்துள்ள விளக்கத்தில் பொதுவாக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் காமராஜர் பல்கலைக்கழக இணைவேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழா தொடர்பாக எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

வேந்தராக உள்ள கவர்னர் அலுவலகமே இதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. விழாவில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி எல்.முருகன் கல்வி துறையை சார்ந்தவர் அல்ல. மேலும் அவர் இணை மந்திரி தான். எனவே பட்டமளிப்பு விழாவுக்கு இதுவரை மத்திய மந்திரி யாரும் அழைக்கப்படாத நிலையில் எனக்கு பிறகு உரையாற்றும்படி மத்திய இணை மந்திரி எல்.முருகனை அழைத்து இருப்பதில் கவர்னருக்கு இருக்கும் நோக்கம் என்ன?

இதனை பார்க்கும்போது மாணவர்களிடையே அரசியலை புகுத்தும் நடவடிக்கையில் கவர்னர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக நான் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி இன்று நடந்தது. முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், பதிவாளர் சிவகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவை தமிழக அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்றதால் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில் கவர்னரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக கவர்னரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News