தமிழ்நாடு செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும்- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

Published On 2023-08-23 12:41 IST   |   Update On 2023-08-23 12:41:00 IST
  • தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கவர்னர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும்.
  • தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது கவர்னரின் வரம்பு மீறிய செயலாகும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரது ஆணவப்போக்கை வெளிப்படுத்துகிறது. எந்த பிரச்சினையிலும் அரசியலமைப்புச் சட்ட அதிகார வரம்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கவர்னர் ரவி கூறியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தவர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி கடிதம் எழுதுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? உயர் கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனை இல்லாமல், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கவர்னர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும்.

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது கவர்னரின் வரம்பு மீறிய செயலாகும். கவர்னராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழக கவர்னரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News