தமிழ்நாடு

எந்த தடயங்களையும் அழிக்கவில்லை-மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: டிரைவர் கனகராஜின் சகோதரர் பேட்டி

Published On 2023-09-14 10:16 GMT   |   Update On 2023-09-14 10:16 GMT
  • எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார்.
  • நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர்.

கோவை:

கொடநாடு கொலை வழக்கில் விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னதாக தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன்.

கொடநாடு வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, என்ன நடந்தது? என எனது தம்பி கனகராஜ் என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் சொல்கிறேன். கொடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள்.

கொடநாடு சம்பவத்துக்கு பிறகு எனது தம்பியிடம் பேரம் பேசியபடி அவர்கள் பணம் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது எனது தம்பியை தாக்கியுள்ளனர். போலீஸ்காரர் ஒருவரும் சேர்ந்து தாக்கியுள்ளார்.

எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார். இதனை நான் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

எனது தம்பி சூட்கேசில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. அவன் எடுத்து வந்த 5 பைகளில் 3 பைகளை சங்க கிரியிலும், 2 பைகளை ஆத்தூரிலும் ஒப்படைத்துள்ளான்.

என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். எனக்கு மனநிலை பாதிப்பு என கூறி இருக்கிறார்கள். அப்படி இருந்தால் என்னை மருத்துவ பரிசோதனைக்கு அல்லவா உட்படுத்தி இருக்க வேண்டும்.

ஏற்கனவே சம்பவம் நடந்தபோது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் விசாரணை நடந்தது. அப்போது என்னை கடுமையான முறையில் தாக்கினர்.

அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. இதுதொடர்பாக அப்போது என்னிடம் விசாரித்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் தற்போது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நான் தடயங்களை அழித்ததாக என்னை கைது செய்தனர். ஆனால் நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை.

நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர். ஆனால் நான் உடன்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைப்பு கொடுப்பேன். என்னை கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். எதற்கும் தயாராக உள்ளேன். உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News