தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது

Published On 2022-10-25 08:28 GMT   |   Update On 2022-10-25 08:28 GMT
  • கந்த சஷ்டி விரதத்தின்போது 6 நாட்கள் முழுவதும் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்கள்.
  • சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதில் சூரபத்மனை முருகர் வதம் செய்கிறார்.

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் முருகன் கோவில்களில் 6 நாட்கள் விரதம் இருந்து 7-வது நாள் விரதத்தை முடிப்பார்கள்.

விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும். கந்த சஷ்டி விரதத்தின்போது 6 நாட்கள் முழுவதும் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்கள்.

இந்த விரதத்தின்போது கந்த புராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் கலி வெண்பா போன்ற நூல்களை பக்தர்கள் பாராயணம் செய்கிறார்கள்.

ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் முதல் நாளான பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட் கள் விரதம் இருந்து முருகனை பூஜித்து திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலி வெண்பா, கந்த சஷ்டி கவசம் போன்ற நூல்களை பாராயணம் செய்து 7-ம் நாள் விரதத்தை முடிக்க வேண்டும்.

அதன்படி பக்தர்கள் அனைத்து முருகன் கோவில்களில் இன்று முதல் 6 நாட்கள் விரதத்தை தொடங்கினார்கள். மேலும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவும் இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் சூரபத்மனை முருகர் வதம் செய்கிறார். 31-ந் தேதி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடிந்து திருத்தணியில் சென்று தங்கியதால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறாது.

Tags:    

Similar News