தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை ருசிக்க கமல் சபதம்: தீவிரமாக செயல்பட கட்சியினருக்கு உத்தரவு

Published On 2023-09-10 04:37 GMT   |   Update On 2023-09-10 04:37 GMT
  • அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
  • கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை:

மக்கள் நீதி மையம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே நடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றையும் கமல்ஹாசன் தனித்தே சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

இப்படி கட்சி தொடங்கிய பிறகு தனித்தே களம் கண்ட மக்கள் நீதி மையம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்து உள்ளது. இதற்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க கமல் திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வியூகம் அமைத்து செயல்பட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

இதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கோவை, தென்சென்னை, மதுரை ஆகிய 3 தொகுதிகளிலும் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை அல்லது கோவை தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை முழுமையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வெற்றியை ருசிக்க வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது சட்ட மன்ற தேர்தலில் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது கட்சியினர் மத்தியில் இப்போதும் வருத்தமான விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது.

எனவே பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்காக பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம் என்றார். இதன் மூலம் கூட்டணி அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

Tags:    

Similar News