தாய், மகன், மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளை- ஆந்திர தம்பதி தப்பி ஓட்டம்
- சுசீலா குடும்பத்தாரிடம் தாங்கள் இப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் கட்டுமான பணிக்காக வந்திருப்பதாக தெரிவித்தனர்.
- சுசீலா அணிந்து இருந்த 11 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா (65). இவர் தனது தாயார் காளியம்மாள், மகன்கள் சீனிவாசன், மருமகள் மாலதி மற்றொரு மகன் பார்த்திபன் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது பக்கத்து வீட்டில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன், லட்சுமி என்ற தம்பதியினர் புதியதாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.
அவர்கள் சுசீலா குடும்பத்தாரிடம் தாங்கள் இப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் கட்டுமான பணிக்காக வந்திருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டிலிருந்த சுசீலா, கன்னியம்மாள், பார்த்திபன் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர். மேலும் சுசீலா அணிந்து இருந்த 11 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.
இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுசீலாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுசீலாவிற்கு பாலும், காளியம்மாளுக்கு பிரியாணியும், பார்த்திபனுக்கு மதுவிலும் மயக்க மருந்து கொடுத்து மயக்கம் அடைய செய்தது தெரியவந்தது.
விசாரணையில் புதிதாக வந்த தம்பதி கணேசன், லட்சுமி ஆகியோர் மாயமாக இருப்பது தெரிய வந்தது. அவர்கள் வாடகைக்கு தங்கி நான்கு நாட்களிலே மயக்க மருந்து கொடுத்து தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.