தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்தது- ஜெயலலிதா கார் டிரைவரின் சகோதரர் பேட்டி

Published On 2023-08-24 08:21 GMT   |   Update On 2023-08-24 08:21 GMT
  • கொடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் தான் வாங்கி அதனை அழித்தனர்.
  • என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளிப்பேன்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தார். கொடநாடு எஸ்டேட் வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார்.

இதையடுத்து கொடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக, அவரது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் மேச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இன்று அவர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

நில மோசடி வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை, ஆனால் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் 10 லட்சம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனை நான் கொடுக்காததால் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அது மட்டும் இல்லாமல் என்னை தனி அறையில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்ததுடன் இரும்பு ராடால் பல்லையும் அடித்து உடைத்து புடுங்கினர்.

இதே போல ஜாமினில் இருந்து வெளிவர மேச்சேரி இன்ஸ்பெக்டர் எனது சான்றிதழ் வழங்காமல் அலைகழித்தார். மேலும் அதற்காக 50ஆயிரம் பெற்றுக்கொண்டு பின்னர் தான் ஜாமீன் வழங்கினார்.

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் தான் வாங்கி அதனை அழித்தனர். ஆனால் நான் தடயங்களை அழித்ததாக என் மீது அந்த வழக்கிலும் பொய் வழக்கு போடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை போலீசார் என்னை அழைத்து விசாரிக்கவில்லை. இனிமேலாவது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அப்போது என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளிப்பேன்.

முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக சந்திப்பேன், கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஐந்து பேக்குகளில் இருந்த ஆவணங்களை சங்ககிரியில் ஒரு நபரிடம் 3 பேக்குகளும் சேலத்தில் உள்ள ஒருவரிடமும் 2 பேக்குகளையும் எனது சகோதரர் கொடுத்ததாக என்னிடம் கூறினார். அப்போது சயனும் உடன் இருந்தார்.

இதற்கிடையே 2 நாட்களில் மர்மமான நிலையில் அவர் இறந்து விட்டார். முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கில் இந்த கால தாமதம் ஏன்? என்று தெரியவில்லை. எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வழக்கு விசாரணையை முறையாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News