தமிழ்நாடு

கோலாகலமாக தொடங்கிய 'ஈஷா கிராமோத்சவம்' போட்டிகள்

Published On 2023-08-12 15:52 GMT   |   Update On 2023-08-12 15:52 GMT
  • கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
  • அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது.

70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக கலந்து கொண்டனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இதேபோல், புதுச்சேரி கூடப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை புதுச்சேரி பொது விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சாய் சரவணக்குமார் அவர்களும், ஈரோட்டில் நடைபெற்ற த்ரோபால் போட்டியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சரஸ்வதி அவர்களும் தொடங்கி வைத்தனர்.

 

இதுதவிர, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள், காவல் துறையினர் என பல தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த கிளெஸ்டர் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்.23-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Tags:    

Similar News