தமிழ்நாடு

சேலத்தில் பிரபல ஜவுளி கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2022-11-03 08:32 GMT   |   Update On 2022-11-03 08:32 GMT
  • தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது.
  • இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கரூர், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் உள்ளது.

இந்நிலையில் கரூர் மற்றும் சேலத்தில் உள்ள கிளைகளில் நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.

சேலம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஜவுளிக்கடையின் கிளையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை, பிற்பகலை தாண்டியும் நீடித்தது. மொத்தம் 4 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை புரிந்து சோதனைகளில் ஈடுபட்டனர்.

ஜவுளிக்கடையின் ஒவ்வொரு தளங்களாக சென்று சோதனை நடத்திய அவர்கள், முறையாக வருமான வரி கட்டியுள்ளார்களா? அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. ஆனால் அதற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை சோதனையில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக கடை அடைக்கப்பட்டு உள்ளே சோதனை நடந்து வரும் நிலையில், ஜவுளி எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News