தமிழ்நாடு

காலை உணவை சாப்பிட விடாமல் தடுத்த சம்பவம்: தொடக்கப்பள்ளியில் கனிமொழி எம்.பி.-அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Published On 2023-09-12 04:51 GMT   |   Update On 2023-09-12 04:51 GMT
  • விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார்.
  • தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார்.

அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.

இந்நிலையில் சம்பந்தப்படட அந்த பள்ளியில் இன்று கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

பொதுமக்கள் சாலை வசதி, வாறுகால்வசதி, தார்ச்சாலை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார். மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News