தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த "ஐ லவ் யூ" மலர்கள்

Published On 2023-11-02 10:24 IST   |   Update On 2023-11-02 10:24:00 IST
  • கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும்.
  • சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி அருகே அமைந்துள்ள பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.

இங்கு கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ள நிலையில் பூங்காவில் குறைந்த அளவு பூக்களே உள்ளன. எனினும் சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

பொதுவாக குளிர் சீசனில் சில வகை பூக்கள் மட்டுமே பூக்கும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல மலர்பாத்திகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாத்தி அமைக்கும் பணி முடிவடைந்தபிறகு மலர் நாற்றுகள் நடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது காஸ்மோஸ் மலர்கள் என்படும் பிங்க் நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன. 8 இதழ்கள் கொண்ட இந்த மலர்கள் 143 பூக்கள் என்றும், ஐ லவ் யூ பூக்கள் என்றும் அழைக்கப்படும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால் அதன்முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

குறிப்பாக கொடைக்கானல் வரும் காதலர்கள் இந்த பூக்களை அதிகம் விரும்பி புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

Tags:    

Similar News