தமிழ்நாடு செய்திகள்

கடும் பனியால் வரத்து குறைந்தது- மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

Published On 2022-12-02 13:11 IST   |   Update On 2022-12-02 13:11:00 IST
  • பிச்சி பூக்கள் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 1,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
  • மற்ற பூக்களான செவ்வந்தி, அரளி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளன.

மதுரை:

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்கள் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே பனி காரணமாக மொட்டுக்கள் கருகும் நிலையால் மகசூல் வெகுவாக குறைந்துள்ளன.

மதுரை மாவட்டம் எலியார்பத்தி, வலையங்குளம், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 டன்னுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருக்கும். தற்போது பனிப்பொழிவு காரணமாக மகசூல் குறைந்ததால் மதுரை மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்களின் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது.

இதன் காரணமாக பூக்களின் விலை வரலாறு காணாத அளவில் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 1 கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூக்கள் இன்று ரூ.2 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. வரும் காலங்களிலும் மல்லிகை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பிச்சி, முல்லை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பிச்சி பூக்கள் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 1,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்களான செவ்வந்தி, அரளி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளன.

விலை உயர்வு காரணமாக மல்லிகை பூக்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் பிச்சி மற்றும் முல்லை பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News