கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
- குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் அவ்வப்போது மழையும், குளிரும் நிலவி வந்தது.
- மாநகரில் இரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் அவினாசி சாலை, சத்தி சாலை,திருச்சி சாலை என முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலையில் இதமான காலநிலையும் நிலவி வந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் அவ்வப்போது மழையும், குளிரும் நிலவி வந்தது. நேற்று மதியத்திற்கு பிறகு குன்னூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் லேசான மழை பெய்தது.
மாலையில் தொடங்கிய சாரல் மழை இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. குன்னூர் சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, ஒட்டுப்பட்டரை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக குன்னூர் பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இன்று காலையும் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரிவோர் பிளாஸ்டிக் கவர்களை அணிந்து கொண்டு வேலை பார்த்தனர்.
இதேபோல் ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று விடுமுறை என்பதால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, கீழ் கோத்தகிரி, கடசோலை, மசக்கல், கட்டப்பெட்டு, ஆகிய பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.
கோவை மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
மாநகரில் இரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் அவினாசி சாலை, சத்தி சாலை,திருச்சி சாலை என முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்கள், சாலைகளில் குண்டும், குழியுமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கோவை தெற்கு-29, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-29.50, மேட்டுப்பாளையம்-27.50, அன்னூர்-24.20, விமானநிலையம்-25.20.