தமிழ்நாடு செய்திகள்
மாத்தூர் பகுதியில் வயல்களை சூழ்ந்த வெள்ளம்.

வெள்ளித்திருப்பூரில் பலத்த மழை- ஏரி மதகு உடைந்து வீடுகள், வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது

Published On 2022-10-14 11:02 IST   |   Update On 2022-10-14 11:02:00 IST
  • அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதி மற்றும் எண்ணமங்கலம் மலைப்பகுதியில் இரவில் கனமழை கொட்டியது.
  • வாழை, தென்னை ஆகியவை மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதி மற்றும் எண்ணமங்கலம் மலைப்பகுதியில் இரவில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக வெள்ளித்திருப்பூர் பகுதியில் உள்ள மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கம்புதூர் ஏரி நிரம்பியது.

5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி நிரம்பி தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அணையின் மதகு நள்ளிரவில் திடீரென உடைந்தது.

ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் மாத்தூர், வெள்ளித்திருப்பூர், மூலக்கடை, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மற்றும் வீடுகளை சூழ்ந்தது. மேலும் மாத்தூர் மாதிரி பள்ளியை சுற்றி தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

வாழை, தென்னை ஆகியவை மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கிராம சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.

வீடுகள், வயல்களை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏரியில் ஏற்பட்ட மதகு உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News