படகு இல்லம் செல்லும் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிய கார்.
ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிய கார்கள்
- ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியது.
- ஊட்டியை போன்று மஞ்சூர், எமரால்டு பாலாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் முதல் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது.
மதியம் 12 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்களும் இந்த மழை காரணமாக கடும் அவதிப்பட்டனர்.
விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன.
கார்களை மீண்டும் இயக்க முடியாமல் தவித்தனர். அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் கார் உரிமையாளர்கள் காரை ஓரமாக தள்ளி சென்று நிறுத்தினர். சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது.
தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே இருந்த குடைகளின் கீழ் நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் தங்கும் விடுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.
ஊட்டியை போன்று மஞ்சூர், எமரால்டு பாலாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.