தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை- அடையாமடையில் 57 மில்லி மீட்டர் பதிவு

Published On 2023-06-13 10:24 IST   |   Update On 2023-06-13 10:26:00 IST
  • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது.
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 31.40 அடியாக உள்ளது.

நாகர்கோவில்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. அடையாமடை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, களியல், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் உள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானம் மட்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் 884 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தோவாளை அனந்தனாறு, புத்தனாறு சானல்கள் உட்பட அனைத்து சானல்களிலும் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.03 அடியாக இருந்தது. அணைக்கு 360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 31.40 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 11.2, பெருஞ்சாணி 7.2, சிற்றார் 1-2, சிற்றாறு 2-7, பூதப்பாண்டி 3.2, களியல் 17.3, குழித்துறை 33, நாகர்கோவில் 1.4, சுருளோடு 9, தக்கலை 14.2, குளச்சல் 4.2, இரணியல் 8, பாலமோர் 25.4, மாம்பழத்துறையாறு 11, திற்பரப்பு 14.2, ஆரல்வாய்மொழி 1, அடையாமடை 57, குருந்தன்கோடு 4, முள்ளங்கினாவிளை 12.2, ஆணைக்கிடங்கு 8.2, முக்கடல் 5.

Tags:    

Similar News