தமிழ்நாடு செய்திகள்
சிங்கம்பேட்டை கேட்டில் ரோட்டோரம் உள்ள ஒரு புளிய மரக்கிளை ஒருபுறம் சாய்ந்துள்ளதால் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்லும் காட்சி.

ஈரோட்டில் விடிய விடிய மழை- கொடிவேரி பகுதியில் 12 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது

Published On 2022-11-28 09:47 IST   |   Update On 2022-11-28 09:47:00 IST
  • குண்டேரிபள்ளம், சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மாபேட்டை, கோபி பகுதிகளிலும் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
  • சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் காலை வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

ஈரோடு:

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக கொடிவேரி அணை பகுதியில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.

மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 123 மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கொடிவேரி அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு பலகை கொடிவேரி நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் குண்டேரிபள்ளம், சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மாபேட்டை, கோபி பகுதிகளிலும் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலையில் நிலவியது.

சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் காலை வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி குளிர்ச்சியான சூழ்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது. குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குண்டேரி பள்ளம் அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 41.75 அடியில் தொடர்ந்து ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதே போல் பெரும்பள்ளம் அணையும், வரட்டுபள்ளம் அணையும் தொடர்ந்து ஒரு மாதமாக தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதே போல் அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் ஒரு மணி நேரமும், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் ஒரு மணி நேரமும் மழை பெய்ததில் ஆங்காங்கே ரோடுகளில் மழை நீர் தேங்கி நின்றது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக மழையில் சிங்கம்பேட்டை கேட்டில் ரோட்டோரத்தில் உள்ள ஒரு ராட்சத புளிய மரத்தின் கிளை உடைந்து ரோட்டில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகின்றனர். பவானி -மேட்டூர் மெயின் ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் எப்போது வேண்டுமானாலும் மரம் முழுமையாக வாகனங்கள் மீது விழுந்து விட வாய்ப்புள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி தர அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கொடிவேரி - 123, குண்டேரிபள்ளம் - 79.60, சத்தியமங்கலம் - 63, பவானிசாகர் -43.20, அம்மாபேட்டை - 27, கோபி - 13.22, நம்பியூர் - 6, தாளவாடி - 2.

Tags:    

Similar News