கோவை குற்றாலம் அருவிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த காட்சி.
வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை- கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
- வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள சோலைக்குறுக்கு என்ற பகுதியில் மரம் வேரோடு சாய்ந்தது.
- மழை காரணமாக சோலையாறு அணை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொழிய தொடங்கி உள்ளது. இதனால் கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வால்பாறையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை அதிகாலை வரையிலும் நீடித்தது. இதனால் அங்குள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டுள்ளார். எனவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள சோலைக்குறுக்கு என்ற பகுதியில் மரம் வேரோடு சாய்ந்தது. அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அய்யர்பாடி எஸ்டேட் புனிதவனத்து சின்னப்பர் தேவாலய வளாகத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கோவை, நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஏற்கனவே தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர். இருந்தபோதிலும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிப்பதற்காக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, வால்பாறை தாசில்தார் அருள்முருகன் உள்ளிட்ட வருவாய், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் முகாமிட்டு நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை காரணமாக சோலையாறு அணை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப்படை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையிலான வீரர்கள் வால்பாறையில் முகாமிட்டு உள்ளனர். அங்கு மிதவை படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட அருவியில் நேற்று திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டியது. பொதுமக்கள் நலன் கருதி அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 127 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சின்கோனாவில் 108, சோலையாரில் 70, வால்பாறையில் 54 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், போத்தனூர் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள போக்குவரத்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கி உள்ளது.