குரூப் 1 தேர்வு- தமிழகம் முழுவதும் 797 மையங்களில் 2 லட்சம் பேர் எழுதினர்
- சென்னையில் மட்டும் 124 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
துணை கலெக்டர் பதவிக்கு 16 இடங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு 23 இடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிக்கு 14 இடங்கள், கூட்டுறவு துறை துணை பதிவாளர் பதவிக்கு 21 இடங்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவிக்கு 14 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 1 இடம், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பதவிக்கு 1 இடம் என மொத்தம் 90 இடங்களை நிரப்புவதற்கு இன்று தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆவர்.
குரூப் 1 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 124 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் இன்று சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குரூப் 1 தேர்வை எழுதினார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளியில் குரூப் 1 தேர்வு எழுத வந்தவர்களை காணலாம்.
சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. பொது அறிவு பிரிவு, பட்டப்படிப்பு தரத்தில் 175 கேள்விகளும், திறனறிவு, மனக்கணக்கு, நுண்ணறிவு பிரிவு, பத்தாம் வகுப்பு தரத்தில் 25 கேள்விகளும் கேட்கப்பட்டன. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் இருந்தது. கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தன.
தேர்வை நடத்துவதற்காக முதன்மை கண்காணிப்பாளர்களாக 797 பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தேர்வு அறையில் தேர்வு நடைமுறை விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. 9 மணிக்கு மேல் வந்த யாரையும் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இருந்தாலும் ஒரு சிலர் 9.03 மணியளவில் வந்தனர். அவர்களை தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்தது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என 2 தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே. இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.