தமிழ்நாடு செய்திகள்

பணம் இல்லை...! மனம் இருக்கிறது...! - ஜி.கே.வாசன்

Published On 2023-11-18 15:09 IST   |   Update On 2023-11-18 15:09:00 IST
  • மத்தியில் பா.ஜனதா, மாநிலத்தில் அ.தி.மு.க. என்ற நிலைப்பாட்டில் இரு கட்சிகளின் நலம் விரும்பியாகவே இருக்கிறோம்.
  • எங்களால் பொருளாதார ரீதியாக பல கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது உண்மை.

அரசியலில் அப்பழுக்கற்றவர் என்ற முத்திரையோடு ஜி.கே.வாசன் எம்.பி. இருந்தாலும் அவரது கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தடுமாறும் காங்கிரசாகவே இருக்கிறது.

அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு முறிந்ததால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கை கோர்க்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா, மாநிலத்தில் அ.தி.மு.க. என்ற நிலைப்பாட்டில் இரு கட்சிகளின் நலம் விரும்பியாகவே இருக்கிறோம். இப்போது கூட்டணி முறிந்தாலும் தேர்தல் நெருங்கும்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.

எங்களால் பொருளாதார ரீதியாக பல கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது உண்மை. 3-வது முறையாக வெல்வது சாதாரண விஷயமல்ல. தற்போதைய அரசியல் சூழலில் 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி என்பது முரண்பாட்டின் மொத்த வடிவம்.

அமலாக்கத்துறையை வைத்து தி.மு.க.வை மிரட்டுவதாக கூறுவது தவறு.

வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் மத்திய அரசின் கீழ் பணியாற்றுகிற துறைகள். பா.ஜ.க.வின் கீழ் பணியாற்றுகிற துறைகள் கிடையாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி, வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி மக்கள் வரிப்பணத்தை ஏய்ப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது தான் இந்தத் துறைகளின் நோக்கம். தமிழக அரசு கூட சி.பி.சி.ஐ.டி. மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்துகிறார்கள். அப்படி என்றால் மத்திய அரசு செய்தால் தவறு மாநில அரசு செய்தால் சரியா?

Tags:    

Similar News