தமிழ்நாடு

மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் செயல்... அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்

Published On 2022-07-30 07:55 GMT   |   Update On 2022-07-30 08:06 GMT
  • அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது.
  • சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து

மதுரை:

கன்னியாகுமரியை சேர்ந்த சுவாமிதாஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் 16 கிலோ மீட்டர் வரை சென்று சுசீந்திரம் கால்வாயுடன் இணைகிறது. இந்த கால்வாயின் இரு புறங்களிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த கால்வாய் நாகர்கோயில் மக்களின் பிரதான நீர் ஆதாரமாக திகழ்கின்றது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள், அரசு நிலங்கள், புறம்போக்கு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசு ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கிறது, அதிகாரிகள் அகற்ற மறுக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் செயலாக அமைகின்றது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News