தமிழ்நாடு

காவல்துறை மரியாதையுடன் வாணிஜெயராமுக்கு இறுதிச்சடங்கு- பெசன்ட்நகர் மயானத்தில் தகனம்

Published On 2023-02-05 07:20 GMT   |   Update On 2023-02-05 07:20 GMT
  • சகோதரியின் குடும்பத்தினர் வாணி ஜெயராமின் இறுதி சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.
  • வாணிஜெயராமின் இசைப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

சென்னை:

பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று இரவு முதல் அவரது இல்லத்திற்கு திரைஉலகினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வரத் தொடங்கினார்கள்.

கவர்னர் ஆர்.என்.ரவி இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, பாடகி சித்ரா, மனோபாலா, இசை அமைப்பாளர்கள் தினா, கணேஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு வாரிசுகள் இல்லாததால் ஜெயராம் மறைவுக்கு பிறகு, அவரது சகோதரி மட்டுமே துணையாக இருந்து வந்தார். தற்போது சகோதரியின் குடும்பத்தினர் வாணி ஜெயராமின் இறுதி சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணி பாடகி வாணிஜெயராம், இயற்கை எய்தியதை அடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வாணிஜெயராமின் இசைப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு வாணிஜெயராமின் உடல் இன்று பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News